இரட்டிப்பான ஆசீர்வாதம்

 

எங்களிற்கு திருமணமாகி 5 வருடங்களாக குழந்தைகள் இல்லை. எல்லோருடைய ஜெபத்தின் மூலம் 2003ம் ஆண்டு கர்த்தர் ஆண் குழந்தை கிடைக்க கிருபை செய்தார்.

இதன் பிறகு 2005 இல் எனக்கு வயிறு நோக ஆரம்பித்தது வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்த பொழுது நான் கர்ப்பம் தரித்துள்ளேன் என வைத்தியர்கள் கூறினார்கள்.எனினும் இரண்டு வாரங்களுக்கு ஒன்றவிட்ட, ஒரு நாள்  வரச்சொன்னார்கள் நானும் சென்று வந்தேன். ஆனால் அவர்கள் கூறிய வார்த்தை எங்களிற்கு அதிர்ச்சியை கொடுத்தது. பரிசோதித்த வைத்தியர்  கரு, பலோப்பியன் குழாயில் வளருவதாக கூறினார்.

அது வளர்ந்து வந்தால் உயிருக்கு ஆபத்து என கூறினார். என் கணவர் அன்று என்னுடன் வரவில்லை. தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு உங்கள் மனைவியின் கரு சரியான இடத்தில் இல்லை, அது வளர்ந்தால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவே.அவரின் கருவை கலைப்பதற்கான மருந்தை ஊசி மூலம் செலுத்தப்போகிறோம் இந்தக் குழந்தை உங்களிற்கு இல்லை என்றனர். பின்னர் என்னை ஒரு அறையில் இருத்தி விட்டு வேறு நோயாளியை அழைத்துச் சென்று விட்டார். நர்ஸ் என் கருவை கலைப்பதற்கான மருந்து எடுப்பதற்காக 6வது மாடிக்கு சென்று விட்டார். இந்நிலையில் நான் மிகவும் கண்ணீரோடு தேவனை நோக்கி ஜெபித்தேன்!  என்னை பரிசோதித்த முதல் டாக்டர் திடீர் என்று மீண்டும் வந்து, உங்களிற்கு ஆட்சேபனை இல்லை என்றால் மீண்டும் ஒரு முறை எனது தலைமை வைத்தியர் உங்களை பரிசோதிக்கலாமா என்று கேட்டனர். காரணம் அன்று மட்டும் என்னை மூன்று முறை பரிசோதித்து விட்டனர். ஆனாலும் நான்  மீண்டும் சோதனை செய்வதற்கு ஒத்துக்கொண்டேன்.  என்னை பரிசோதித்த வைத்தியர் உங்கள் வயிற்றில் ஒரு குழந்தை இல்லை இரண்டு  குழந்தைகள் என்று கூறினார். அது மட்டும் அல்ல இரண்டு குழந்தைகளும் சரியான இடத்தில் வளருவதாகவும் கூறினார். அல்லேலுயா!!

முதல் வைத்தியர் சொன்னதும் உண்மை, பின்பு தலைமை வைத்தியர் சொன்னதும் உண்மை, இதன் நடுவில் கர்த்தர் செய்த அற்புதம் மிகப்பெரிய உண்மை!!!

பிள்ளையை கேட்ட எங்களிற்கு, தேவன் அழகான மூன்று பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். ஆமென் தேவனுக்கே சகல மகிமையும் உண்டாவதாக!!!!

 

சசி,செரீனா லவுசான் சுவிஸ்